தேர்தல் ஆணையத்தின்மீது வாக்குகள் திருட உதவியதாக ராகுல்காந்தியின் தொடர் குற்றச்சாட்டுகளை அடுத்து என்ன செய்வதென திக்குமுக்காடி வந்த பா.ஜ.க., மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மூலம் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி அமேதி, ரேபரேலி, வயநாடு, டயமண்ட் ஹார்பர் உள்ளிட்ட ஆறு தொகுதி களில் போலிவாக்குகள் விழுந்திருப்பதாகத் புகார் தெரிவித்தது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் தொகுதியில்கூட 2021 சட்டமன்றத் தேர்தலில் 19,476 போலி வாக்குகள் விழுந் திருப்பதாகவும் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து காங்கிரஸ் ஊடக மற்றும் விளம்பரத்துறைத் தலைவர் பவன் கெரா செய்தியாளர்களைச் சந்தித்து, "ராகுல் குற்றச் சாட்டுக்குப் பின் ஆறு நாட்களாக, பா.ஜ.க.வுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை, எப்படி பதிலளிப்பதென்று தெரியவில்லை. ஆனால் ஆகஸ்ட் 13-ஆம் தேதி, அனுராக் தாக்கூர் செய்தியாளர்களைச் சந்தித்து, லோக்சபா தேர்தலில் ஆறு இடங்களில் போலி வாக்காளர்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறினார். முதலில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினோம். இப்போது ஆளும்கட்சியும் குற்றம்சாட்டி தேர்தல் ஆணை யத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது. இத்தனை நடந்தபின் 2024 தேர்தலை ரத்து செய்ய வேண்டாமா? போலி வாக்குகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலை ரத்து செய்யுங்கள்''’என்று பா.ஜ.க.வின் குரல்வளையைப் பிடித்திருக்கிறார்.
அத்தோடு, "தேர்தல் ஆணையமும் தாக்கூரும் வாரணாசியின் மின்னணு வாக்காளர் பட்டியல் தரவையும் வெளியிடவேண்டும். மகாதேவ்புரா சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளர் பட்டியலை பகுப்பாய்வு செய்ய எங்களுக்கு ஆறு மாதங்கள் பிடித்தன. பா.ஜ.க. ஆறு மக்களவைத் தொகுதி, ஒரு சட்டமன்றத் தொகுதியை ஆறு நாட்களில் பகுப்பாய்வு செய்து குற்றம்சாட்டியிருக்கிறது. அவர்களுக்கு மட்டும் இது எப்படி சாத்தியமானது?
ஆக, மின்னணு டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுக்கு மட்டும் பகிர்ந்துள்ளதா? இது தேர்தல் ஆணையத்திற்கும் பா.ஜ.க.விற்கும் இடையிலான கூட்டுச் சதி. காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க் கட்சிகளுக்கு அத்தகைய தரவு மறுக்கப் பட்டாலும், பா.ஜ.க. அதை மிக எளிதாகப் பெறுகிறது''’என நெற்றிப்பொட்டில் அடித்தாற் போன்ற கேள்விகளை எழுப்பினார்.
அத்துடன் நிறுத்தாமல், “"பிரதமர் மோடி மிகக்குறைந்த வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வாரணாசிக்கான வாக்காளர் தரவையும் தாக்கூர் வெளியிட்டிருக்கவேண்டும். பிரதமர் இருக்கும் இடத்தில் இருக்கத் தகுதியற்றவர், ஏனெனில் அவர் போலி வாக்குகளின் அடிப்படையில் 2024-ல் வாரணாசி தொகுதியை வென்றார். பத்திரிகையாளர் சந்திப்பில் வாக்குத் திருட்டு பற்றி உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே, தேர்தல் ஆணையம் ராகுலை பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்யுமாறு கேட்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. தாக்கூர் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்டு 24 மணிநேரம் கடந்துவிட்டது, தேர்தல் ஆணையம் அவருக்கு அத்தகைய அறிவிப்பை அனுப்பியுள்ளதா?'' ’எனவும் கிடுக்கிப்பிடி போட்டார்.
கெரா, இப்படி அனுராக் தாக்கூரையும் தேர்தல் ஆணையத்தையும் மடக்கிக் கொண்டிருக்க, பீகார் வாக்காளர் பட்டியலில் இறந்துபோனதாகச் சொல்லப்பட்ட, 17 பேரை உச்சநீதிமன்றத்துக்கு அழைத்து வந்து தேர்தல் ஆணையத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கினார் யோகேந்திர ஜாதவ். ராகுலோ, அவர்களை தேநீர் சாப்பிட அழைத்து, “"உயிர்த் தெழுந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பை தேர்தல் ஆணையம் தனக்கு வழங்கியுள்ளது'’எனக் குறிப்பிட, பா.ஜ.க.வும் தேர்தல் ஆணையமும் திக்கமுக்காடிப் போயுள்ளன.
யூ டூ புருட்டஸ் மற்றும் பேரலை சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பேசிய மனித உரிமைப் போராளி தீஸ்தா செதல்வாட், "பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதைப் பற்றி பேசுகிறோம். ஆனால் தமிழ்நாட்டில் 2021-2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையே 30 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க. தமிழகத்துள் வரவே முடியாது என்று மெத்தனத்துடன் இருந்துவிடாதீர்கள்... அவர்கள் எதையும் செய்வார்கள்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு பக்கம் தி.மு.க. கூட்டணி, மறுபக்கம் அ.தி.மு.க. கூட்டணி போட்டியிட, பா.ஜ.க.வும் போட்டியிட்டது. புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் சேர்த்து 11 தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தனர். இது எப்படி சாத்தியமானது? மாலை 5 மணிக்குப் பிறகு திடீரென்று 7 சதவீதம் அளவுக்கு வாக்கு எண்ணிக்கை உயர்ந்தது எப்படி?
பா.ஜ.க., ஒரு நாயைக் கொல்ல வேண்டுமென்றால் முதலில் அதற்கு பைத்தியப் பட்டம் கட்டிவிட்டுதான் கல்லை எறியும். தமிழ்நாட்டில் வெல்லக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்ற கருதுகோளை உருவாக்கு வதுதான் இதுவரையிலும் பா.ஜ.க.வின் நோக்கமாக இருந்தது. நாடாளுமன்ற தேர்தலில் எதையோ செய்து அதை சாதித்துவிட்டனர். அதனால்தான் அடுத்துவந்த அனைத்து விவாதங்களிலும் தமிழ்நாட்டில் எங்களுக்கு 11.24 சதவீத வாக்கு வங்கி இருக்கிறது என்பதை திரும்பத் திரும்ப சொன்னார்கள்''’என குரல் கொடுத்துள்ளார்.
இதனுடன் கிட்டத்தட்ட 70 லட்சம் வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை என்ற சிக்கல் வேறு தலைக்கு மேலாக கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கிறது. தி.மு.க.வும் பிற மாநிலக் கட்சிகளும் உஷாராக வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.